Thursday, October 18, 2012



என் பால்யம்  முதல் ஆந்திராவில் பிழைத்துக்கொண்டிருக்கிற  இந்த அக்டோபர் வரையும் விடுமுறை என்றாலே அம்மாவை அழைத்துக்கொண்டு   நீலகிரி  கூடலூர் வயநாடு  என்று கிளம்பத்தான் தோன்றுகிறது எந்தமுகமூடியுமற்ற நிர்வாணங்களை வனங்களின்வழியேதான் மீட்டுக்கொள்ளமுடியும்  வாழ்வை நுகர்வாகபார்க்காத சனங்களின் சொந்தபூமியது. நமக்குள் கட்டமைக்கப்பட்டிருக்கிற சூழ்ச்சிகள் ஏதுமற்ற பழங்குடிகளின் புண்ணியபூமியது

மூன்று கிலோமீட்டர் அடர்ந்த மரங்களும் சோலைகளும் நிறைந்த பள்ளத்தாக்கில் மிக குறுகிய ஒற்றையடி பாதையில்தான் சென்றிருக்கிறேன்.ஆவிபறக்கும் யனைகளின் சூடான சாணங்களும் மான்களின் துள்ளலும் நின்று யாரென்று கேள்விகேக்கும் காட்டெருமைகளின் பார்வைகளும்  பறவைகளின் கீரிச்சுகளும் இன்னும் அப்படியே மனசுக்குள் தேங்கியிருந்து தழும்பிக்கொண்டிருக்கிறது அங்கே தாத்தாவுக்கென்று  சொந்தமாக கொஞ்சம் நிலமிருந்தது.அதிலேதான் மஞ்சளும்,காப்பி கொட்டை மரமும் அன்னாசியும்  பயிரிட்டிருந்தார் ..அங்கே கிடைக்கும் மஞ்ச மாவு என என்னால் செல்லமாக அழைக்கப்பட்ட இனிப்பு கலக்கப்பட்ட சத்து மாவு இன்றளவும்  ஒரு தொகுப்பாக  இனித்துக்கொண்டேஇருக்கிறது.


கேரளாவையும் , நீலகிரியையும் நினைக்கும்போதெல்லாம்  அதன் வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதைகளோடு, குளிரும் , தேயிலை செடியும் ,அதன் இலைகளை பறித்து முதுகில் சுமந்து கொண்டு போகும் பெண்மணிகளும் நினைவுக்கு வருவதை தவிர்க்கமுடிவதில்லை   . வரிசை வீடுகளில் தமிழோ,மலையாளமோ பேசுபவர்கள் அவர்கள்தான்  அதன் மக்கள் என்று மனப்பூர்வமாக நம்பியிருந்தேன் .அந்த மண்ணின் பரிச்சயம் இருந்தாலும் உறவுகளின் நீண்ட தொடர்ச்சி அங்கிருந்தாலும் அந்த மலைகளின் வரலாறோ அதன் பூர்வீக மக்களைப் பற்றியோ கொஞ்சமும் நான் அப்போது அறிந்திருக்கவில்லை

இடையில் மூங்கில் சுமந்துசெல்லும் பெண்களும் தேன்சேகரிக்கும் சுறைபுரடையுடனும் தாடிவளர்ந்த ஆண்களும் இளசுகளும் இளுபங்கொட்டைகளை சேகரித்துகொண்டிருக்கும் பொடிசுகளும்  மலைப்பகுதிகளின் குறுக்கிலும் நெடுக்கிலும் நடந்து பார்த்ததுண்டு நண்பணின்   மாமா  இவர்கள் மலசர்கள்  ரொம்ப ஆபத்தானவர்கள் என்று அறிமுகப்படுத்தியிருக்கிறார்

எப்படி ஆபத்தானவர்கள் என்பதுபற்றி என்னால் அப்போது கேள்வி எழுப்பமுடியவில்லை  ஆனால் இப்போது நாளி எனது நண்பனின்  மாமாவின் கல்லறையை தோண்டியாவது ஒரு நாளு கேள்வி கேக்கவேண்டும் என்ற ஆவேசத்தை வழங்கியிருக்கிறது

இந்த கல்விமுறை  எப்படி நமக்கு  உள்ளூர்மக்களின் அடித்தள வரலாற்றை சொல்லித்தரவில்லையோ அதேபோல்தானே நண்பனின் மாமாவுக்கும் சொல்லித்தந்திருக்காது என்று சமாதானம் செய்துகொண்டாலும் நாளியின் வீச்சால் மனசு தகிப்பதை நிறுத்திக்கொள்ளமுடியவில்லை



ஒரு தனிமனிதனை, ஒரு இனத்தை,ஒரு மொழியை ,ஒரு நாட்டை செழுமைப்படுத்த முழுமைப்படுத்த முக்கியமானது அதன் பூர்வீக வரலாறுதான்.அப்படிதான் மலைகளின்காடுகளின், அதன் பூர்வீக மக்களை,அவர்களின்மீதுசுமத்தப்படும் அடிமைத்தனத்தையும்,சுரண்டலையும் வரலாற்று ஆய்வோடு அந்த மக்களின் பக்கம் நின்று  எடுத்து நம் முன்வைக்கிறது நாளி ஆவணப்படம்.


ஒவ்வொரு அரசும் மலைகளுக்குள் ஊடுருவியது எதற்க்கு என்பதில் தொடங்கி பல்வேறு நூற்றாண்டுகளாக நடந்துகொண்டிருக்கிற  சுரண்டல்களை வழக்கமான ஆவணப்படங்களைப்போல கண்ணீரும் கம்பலையுமில்லாமல் அதே சமயம் வாயடைத்துப்போகவைக்கிற வரலாற்றுச்சான்றுகளை முன்வைத்து இந்தப்போரை நாளி தொடங்குகிறது

பழங்குடிகள் காடுகளின் ஓர் அங்கம் அவர்களைவிட்டுவிட்டு புலிகளையும் மரங்களையும் புல்லையும் பார்ப்பது எவ்வளவு மடத்தனமானது என்று பிடறியில் ஓங்கி அறைகிறது நமக்குள் ஊடுருவி நம்மை சிந்திக்க வைக்கிறது ,வெட்கி தலைக்குனியவைக்கிறது.


கருப்பு தங்கம் என அழைக்கப்பட்ட மிளகும் தந்தமும் அம்மக்களின் சுதந்திர வாழ்வை எப்படியெல்லாம் அரிக்க  ஆரம்பிக்கிறது என்பதையும் அதற்கு அந்த அரசுகள் சைவத்தையும்,சமணத்தையும்,வைணவத்தையும் எப்படியெல்லாம் கைவாளாக கொண்டு  அவர்களை அடிமைப் படுத்தியது என்பதையும் ஆய்வோடு நமக்கு தருகிறது.

மொழி பண்பாடுகளின்மேல்நடந்த தாக்குதல்களையும்
எப்படி சமவெளிகளின் விளக்குகள் ஆதிக்குடிகளின் குறுதியில் ஒளிர்கிறது? யார் அரசு, இது யாருக்கான அரசு  என்பதற்கான கேள்வியை படம்முழுக்க காலக்கிரமவரிசைப்படி  உணர்த்திக்கொண்டே செல்கிறது

பலர் சொல்வதைப்போல் இதன் நீளம் எனக்கொன்றும் பெரிதாகப்படவில்லை நாம்  நீளமான  ஆவணப்படங்களை பார்த்து பழக்கப்படவில்லையென்பதால் இதன் நீளம் குறித்து கேள்விகள் எழும்புவதை தவிர்க்கமுடிவதில்லை

தங்கள் வாழ்வாதாரத்தை தொலைத்து,சொந்த நிலங்களிலே அகதிகளாய் அடிமைகளாய் ஆக்கப்பட்ட பழங்குடி மக்களின் வாழ்வை, மலைக்காடுகளின் சீரழிவை,வரலாற்று ஆய்வாக அக்கறையோடு ஆவணப்படுத்திய தோழர்கள் இரா.முருகவேள்,"ஒடியன்" இலட்சுமணன் ஆகியோர் தொடர்ந்து இயங்குவது நமக்கும் சமூகத்துக்கும் நிறைய பங்களிப்புகளை கொடுக்கமுடியும்

இப்படத்தை இன்னும் சிறப்பாக்க கீழ்கண்டவிசயங்கள் என்னால் சுட்டமுடிகிறது



1 சில இடங்களில் ஆவணப்பட இயக்குநர்களே  முடிவுகளை சொல்லாமல் பட்டறிவாளர்களின் பேட்டிகளின் மூலமே  நகர்த்தியிருக்கலாம்

2 பழங்குடிகளின் இசைக்கோர்வைகளை அங்கங்கே இணைத்திருக்கலாம்

3 குரலில் என்ன வ்ருகிறதோ அதையே காட்டவேண்டும் என அவசியமில்லை பழங்குடிகளின் பல்வேறு அசைவுகளை இணைத்திருக்கலாம்

4 படக்கோர்வை  நன்றாக  இருந்தபோதும் காட்சிகளை தேர்ந்தெடுப்பதில் இன்னும் கவனம் எடுத்திருக்கலாம்
5 குரலில் சில இடங்களில் தடுமாற்றம் தெரிகிறது அதை மீண்டும்(retake)  பதிவு  செய்து மாற்றியிருக்கலாம்


இவை தவிர்த்து எந்த விடயத்தையும்  இப்படத்தைநோக்கி என்னால் குறையாக சொல்லமுடியவில்லை

1 வனத்தைசார்ந்து வாழும் பிற உழைக்கும் மக்களுக்கும்  பழங்குடிகளுக்குமிடையே பிளவு ஏற்படுத்தக்கூடாது என்கிற நோக்கில் சில சமூகங்களின் பெயர்களை தவிர்த்திருப்பதும்

2 முழுக்க முழுக்க அப்பட்டமாக பழங்குடிகளுக்கு எதிராக இயங்கும்  குரூரமான   அரசியலையும் வனச்சட்டங்களையும்  தயக்கமின்றி தோலுரித்திருப்பதும்
3 எந்த விசயத்தையும் துண்டு துண்டாக பார்க்காமல் ஒன்று இன்னொன்றின் தொடர்சியாக வரலாற்றுக்கண்ணோட்டத்தோடு அணுகியிருப்பதும்

4 படத்த்யாரிப்புக்கு முன்னே பெரும்காலத்தை அதன் ஆய்வுக்கு ஒதுக்கியிருப்பதும்

5 மிகமிக பொருத்தமான குரலை தேர்வு செய்திருப்பதும்

சிறப்புகளாக  நாளியில்  சொல்லமுடிகிறது

நாம் அடுத்த தலைமுறைக்கு ஆவணப்படத்துக்கு  நாளியை தைரியத்தோடும் கொஞ்சம் கர்வத்தோடும் பக்கத்து மொழிகளுக்குக்கும்கூட சுட்டிக்காட்டமுடியும்


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home